பெங்களூர்: கர்நாடகாவில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது எந்த கட்சிக்கு லாபம் என்ற கணக்கீட்டில் அரசியல் விமர்சகர்கள் இறங்கியுள்ளனர்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டதால் ராஜராஜேஸ்வரி நகரிலும், இன்று தேர்தல் நடைபெறவில்லை.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
காலை 10 மணி நிலவரப்படி, 10.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, அது 36.9 சதவீதமாக இருந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 61.53 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் உள்ள இறுதி கட்ட நிலவரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த பிறகு இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 35 வருடங்களுக்கு பிறகு அப்போதுதான் அதிகபட்சமாக மக்கள் வாக்களித்தனர்.
அப்போது பாஜக ஆட்சியில் இருந்தது. பெரும்பான்மை மக்கள் வந்து வாக்களித்ததன் விளைவாக காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. பாஜக வெறும் 40 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. மக்கள் அதிகமாக வந்து வாக்களித்தால் அது ஆளும் கட்சிக்கு எதிரான கோபம்தான் என்ற கணக்கு உள்ளது. எனவே இவ்வாண்டு அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகியுள்ளதால் காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளது.
அதேநேரம், காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல இலவச கவர்ச்சி திட்டங்கள், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்திருக்கும் என்று சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
Comments
Post a Comment