காவிரி நதிநீர் பங்கீடு வரைவு திட்டத்தை மே 14ந் தேதி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு | POLIMER NEWS
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 4ஆவது முறையாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதி நீர் பங்கீட்டு திட்டத்தை 6 வார காலத்திற்குள் செயல்படுத்தாத மத்திய அரசின் மீது, தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, மே 3ஆம் தேதிக்குள் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 3ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாததோடு, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் இருப்பதால், மே மாதத்திற்கு தமிழகத்திற்கு காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம், வரைவுத் திட்டத்தை தயாரிக்கும் பணி குறித்து மத்திய அரசு 8ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. இதற்கு தமிழகத்தின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதைச் செய்யாதது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும் எனவும் கூறினர். இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையிட்ட நீதிபதிகள், வரும் 14ஆம் தேதிக்குள் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.
Comments
Post a Comment