மருத்துவ ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தவறானது என விளக்கம்! | NEWS 7 TAMIL


பயிற்சி மாணவர்களுக்கு மகப்பேறு தொடர்பாக அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் தவறாக சித்தரிக்கப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்படுவதாக சென்னை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்தியல் மருத்துவராக உள்ள கார்த்திகேயன், அறுவை சிகிச்சை நிபுணர் ரோஷன்  ஆகியோர் மருத்துவ மாணவிகள் 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி மாணவிகள் தலைமைச் செயலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். இது தொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றும் புகார் மனுவுடன் அனுப்பப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து, சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கஸ்தூரிபாய் மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயா, பேராசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை காவல் 
ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. 

அதில் பயிற்சி மாணவர்களுக்கு மகப்பேறு தொடர்பான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை தவறாக புரிந்துகொண்டு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை தூண்டிவிட்டு அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Comments